இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் இருக்க வேண்டும்

X
அரியலூர், ஏப்.22- இயற்கை வளங்களைப் பாதுபாப்து நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல பொறுப்பும் கூட என்றார் அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன். அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சர்வதேச பூமி தின விழாவில் அவர் மேலும் பேசியது: இந்த பூமி ஆனது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. எல்லா உயிரினங்களும் பூமிக்கு நன்மையை மட்டுமே கொடுக்கின்றன. நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மூலப்பொருள்களையும் இயற்கை தருகிறது. இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், மரங்கள், உயிரினங்கள், புல்வெளிகள், விளைநிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் போன்றவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று. ஆனால் அதிகரித்து விட்ட பிளாஸ்டிக் பயன்பாடு, இயற்கைப் பாசன முறையிலிருந்து விலகிச் சென்றதன் விளைவு, காடுகள் அழிப்பு, நிலப் பயன்பாட்டின் மாற்றம், காற்றை மாசுபடுத்தும் எரிபொருள்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கலந்த புகை, பெருமளவில் வெளியேற்றப்படும் கழிவு நீர் போன்றவைகளால் புவி மண்டலத்தை வெப்பமடைந்து, கடும் வறட்சியையும் தருகிறது. தட்பவெப்ப நிலையில் உருவான மாற்றத்தால், போதிய நீர்வளம் இன்றி நீர்வரத்து குறைந்து மிகவும் பாதிப்பைத் தருகிறது. மழை வளம் குறைந்து, நீர்வாழ் உயிரினங்கள் பெருமளவு அழியும் சூழல் உள்ளது. எனவே இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட. இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவை அழிவதைத் தடுக்க முன்வரவேண்டும். குறிப்பாக நெகிழிப் பொருள்களை தவிர்க்க வேண்டும். அதிகளவில் மரக்கன்றுகளை நட வேண்டும்.குடிநீரையும், இயற்கை வளங்களையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார். பின்னர் அவர் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். வனவர்கள் சிவக்குமார், ஜீவா ராமன், சுற்றுச்சூழல் ஆர்வலர் நிக்கில் ராஜ், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்ச்செல்வி, ஆசிரியர்கள் தனலட்சுமி,அபிராமி, பாலமுருகன், அந்தோணிசாமி மற்றும் பசுமை படை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

