லாட்டரி சீட்டு விற்ற நாலு பேர் கைது

X
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிராத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்கும் பொருட்டு ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பெயரில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சத்தியமங்கலம் நகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். காரில் 2 லேப்டாப், 2 பிரிண்டர் மற்றும் ஒரு கம்ப்யூட்டர், ரூ.11,300, 1 டெஸ்டாப், 6 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் காரில் இருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலம் வரதம்பாளையத்தைச் சேர்ந்த கோல்டன் ஜோசப் (43), காந்தி நகரைச் சேர்ந்த டிக்சன் (33), வடக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த துரைசாமி (66), அண்ணா நகர் பகுதியை சிறந்த அப்துல் அஜீஸ் (40) ஆகிய 4 பேர் என்பதும், இவர்கள் காந்தி நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வெள்ளை தாளில் பிரிண்ட் செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து கார் மற்றும் கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல் பங்களாபுதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டியில் வெங்கடேஷ் என்பவர் பெட்டி கடையில் 500 கோடியாக அச்சிடப்பட்ட லாட்டரி சீட்டுகளும். ஒரு சிபியூ மானிட்டர்,கீபேட், மவுஸ் ஆகியவற்றை கைப்பற்றி பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் பொங்கல் பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் கணினியில் அச்சிட்ட 24 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரத்து 540 கைப்பற்றி கோபியை சேர்ந்த பழனிச்சாமி (65), பழனிச்சாமி (70) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைப்போல் மொடக்குறிச்சி காவல் நிலையத்திற்குட்பட்ட சின்னியம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் செல்லமுத்து (37) என்பவர் வெள்ளை தாளில் நம்பர் எழுதி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story

