பெண்ணை கைது செய்த போலீசார்

X
ஈரோடு சூரம்பட்டி, அணைக்கட்டு ரோடு, இந்திரா வீதியைச் சேர்ந்தவர் நட்ராஜ் (50). கூலித்தொழிலாளி. மனைவி, மகள், தாயுடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் மதியம் வீட்டை பூட்டி விட்டு சாவியை பிரஸ் வைக்கும் ஸ்டாண்டில் வைத்து சென்றார். அவர் மனைவி மேல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். பக்கத்து வீட்டில் தாய் இருந்தார். சிறிது நேரம் கழித்து அவரது தாய் வெளியே வந்து பார்த்தபோது அவரது வீட்டை அடையாளம் தெரியாத முகத்தில் மாஸ்க் அணிந்த ஒரு பெண் பூட்டியுள்ளார். பின்னர் அந்த பெண் வேகமாக வெளியே வந்து ஆட்டோவில் ஏறி அங்கிருந்து கிளம்பி சென்றார். இதனால் சந்தேகப்பட்ட நடராஜனின் தாய் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 12 பவுன் நகை, ரூ.15,000 பணம் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். திருட்டில் ஈடுபட்ட 35 வயது மதிக்கத்தக்க பெண் ஈரோடு ரெயில் நிலையம் சென்று அங்கிருந்து ரெயிலில் ஏறி கரூர் சென்றது உறுதியானது. கரூர் சென்ற சூரம்பட்டி போலீசார் அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்தனர். அவரை விசாரணைக்காக ஈரோடு அழைத்து வந்தனர். அந்தப் பெண் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் குறிப்பாக பூட்டிய வீடுகளில் திருடுவது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

