பணி நிரந்தரப்படுத்தக் கோரி தஞ்சையில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

X
தஞ்சாவூர் தலைமைத் தபால் நிலையம் முன்பு, டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில், திங்கட்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.மதியழகன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் துவக்க உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், "22 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும், அனைத்து டாஸ்மாக் ஊழியர்களையும் பணி தொடர்ச்சியுடன் நிரந்தரப்படுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வீரையன், மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், துணைத்தலைவர் கோவிந்தராஜ், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் இ.டி.எஸ்.மூர்த்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டலத் தலைவர் காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

