கோவை: பிரம்மாண்ட தேசிய கொடி அச்சிட்டு உலக சாதனை!

18 அடி நீளம் மற்றும் 12 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட தேசியக் கொடியை வெறும் 19 நிமிடங்களில் அச்சிட்டு கலாம்ஸ் உலக சாதனைப் புத்தகத்தில் புதிய சாதனை.
கோவை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர் கல்வி நிறுவனத்தின் அச்சுத் தொழில்நுட்பத் துறை மாணவிகள், 18 அடி நீளம் மற்றும் 12 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட தேசியக் கொடியை வெறும் 19 நிமிடங்களில் நேற்று அச்சிட்டு கலாம்ஸ் உலக சாதனைப் புத்தகத்தில் புதிய சாதனை படைத்துள்ளனர். பன்னிமடையில் உள்ள அவினாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த சாதனை முயற்சியில், 23 மாணவிகள் காவி, பச்சை மற்றும் வெள்ளை வண்ணங்களைப் பயன்படுத்தி தேசியக் கொடியை அச்சிட்டனர். அச்சுத் தொழில்நுட்பத் துறையின் முக்கியத்துவத்தையும், வேலைவாய்ப்புகளையும் எடுத்துரைக்கும் நோக்கில் இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுக்கு ஆல் இந்தியா ஃபெடரேஷன் ஆஃப் மாஸ்டர் பிரிண்டர்ஸ், ஸ்கிரீன் பிரிண்டிங் இந்தியா, திருப்பூர் மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேசன் மற்றும் பல்வேறு வண்ண மை உற்பத்தியாளர்கள் ஆதரவு அளித்தனர். சாதனை முயற்சியின் தொடக்க விழாவில் துணை வேந்தர் முனைவர் பாரதி ஹரிசங்கர், டீன் சற்குணம் மற்றும் துறை தலைவர் அருள் மொழி ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளை ஊக்குவித்தனர். மாணவிகளின் இந்த அசாதாரண சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Next Story