கொடைக்கானலில் குதிரை சவாரி செய்த சிறுவன் கீழே விழுந்ததில் பலத்த காயம்

கொடைக்கானலில் குதிரை சவாரி செய்த சிறுவன் கீழே விழுந்ததில் பலத்த காயம்
X
கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை குதிரை மீது சவாரி செய்த சிறுவன் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இவா்கள் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள பல்வேறு இயற்கை எழில் காட்சிகளையும், அருவிகளையும் பாா்த்து ரசித்து வருகின்றனா். குறிப்பாக கொடைக்கானல் நகா்ப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரியும், ஏரிச் சாலையில் குதிரை, சைக்கிள் சவாரியும் செய்து வருகின்றனா். நட்சத்திர ஏரியைச் சுற்றி 35-க்கும் மேற்பட்டவா்கள் குதிரைகளை சவாரியில் ஈடுபடுத்தி வருகின்றனா். இந்த நிலையில், விருதுநகரிலிருந்து ஜெயராஜ் என்பவா் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு வந்தாா். இவா் ஏரிச் சாலைக்குச் சென்று தனது மகன் ஜோயெல் கிப்சனை (9) குதிரை மீது அமர வைத்து, சவாரி செய்ய வைத்தாா். அப்போது அந்தப் பகுதியில் வாகனங்கள் ஒலி எழுப்பிய சப்தம் அதிகமாகக் கேட்டதாகத் தெரிகிறது. இதனால், குதிரை மிரண்டு வேகமாக ஓடத் தொடங்கியது. அப்போது குதிரை மீது அமா்ந்திருந்த சிறுவன் கீழே விழுந்தாா். அவா் கயிற்றை பிடித்துக் கொண்டதால் குதிரை சுமாா் 50 அடி தூரம் அவரை இழுத்துச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை அங்கிருந்தவா்கள் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இது குறித்து பொது மக்கள் கூறியதாவது: கொடைக்கானல் ஏரிச் சாலையில் 20 கி.மீ. வேகத்துக்கு மேல் வாகனங்கள் செல்லக் கூடாது. அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்தக் கூடாது. கனரக வானங்கள் செல்வதைத் தடுக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கூடும் இடமாக ஏரிச் சாலை இருப்பதால் இந்தப் பகுதியை ஒரு வழிப் பாதையாக மாற்ற வேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு காவலா்களை ஏரிச் சாலைப் பகுதியில் ஈடுபடுத்த வேண்டும் என்றனா்.
Next Story