கோவை: ஜான் ஜெபராஜ் கைதுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

போதகர் ஜான் ஜெபராஜூக்கு ஆதரவாக, வருகிற 25ஆம் தேதி கோவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மத போதகர் ஜான் ஜெபராஜூக்கு ஆதரவாக, வருகிற 25ஆம் தேதி கோவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அகில இந்திய கிறிஸ்தவ வாலிபர்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவன பொதுச் செயலாளர் ஜோஸ்வா ஸ்டீபன் நேற்று தெரிவித்துள்ளார். கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான முன் அனுமதி கோரி மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜோஸ்வா ஸ்டீபன், ஜான் ஜெபராஜ் மீது காவல்துறையினர் திட்டமிட்டு பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். கிறிஸ்தவர்களுக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் நிலவுவதாகவும், ஜான் ஜெபராஜின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத சக மத போதகர் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். மேலும், ஜான் ஜெபராஜ் குடும்பப் பிரச்சினையை மையமாக வைத்து போக்சோ வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 11 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றதாக கூறப்படும் சம்பவத்திற்கு தற்போது போக்சோ வழக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Next Story