மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண்ணை குண்டுகட்டாக தூக்கி சென்ற போலீசார்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண்ணின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத கலெக்டரை ஒருமையில் பேசிய பெண்ணை தரதரவென இழுத்து, தூக்கி சென்று ஆட்டோவில் கொண்டு சென்ற போலீசார் : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுக்கா பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழப்பூடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணீஸ்வரி (52).இவரது நிலத்தை அவரது உறவினர்கள் மோசடி செய்து ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசாரிடமும் தாசில்தாரிடமும் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுநாள் வரையிலும் அதிகாரிகள் அவர் மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கண்ணீஸ்வரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனது நிலப் பிரச்சனை சம்மந்தமாக தீர்வு காண வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்தவர் மனு அளித்துவிட்டு தான் கொடுத்த மனு மீது இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி சத்தம் போட்டு திடீரென ரகளையில் ஈடுபட்டார். மேலும் அவர் மாவட்ட கலெக்டரை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட கண்ணீஸ்வரியை பிடித்து தரதரவென இழுத்து , கை காலை பிடித்து தூக்கி ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் போலீசார் அவரிடம் இது போன்ற ஒரு செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Next Story






