ஆண் குழந்தை எதிர்பார்த்து பெண் குழந்தை பிறந்ததால் கொன்று தோட்டத்தில் புதைத்த தாய்

X
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சிவசக்தி. இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்த சிவசக்திக்கு சின்னாளபட்டி தனியார் மருத்துவமனையில் கடந்த 16-ஆம் தேதி மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த சிவ சக்திக்கு பெண் குழந்தை பிறந்தது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. கடந்த 19ஆம் தேதி தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பிய நிலையில், மறுநாள் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது. இதனையடுத்து சிவசக்தி இறந்த பெண் சிசுவை யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறம் புதைத்துள்ளார் இந்நிலையில் குழந்தையின் இறப்பு குறித்து அப்பகுதி அங்கன்வாடி பணியாளர் சமூகநலத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெண் சிசுவின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட மருத்துவக் குழுவிடம் சிவசக்தி முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவ குழுவினர் பெண் சிசு மரணம் குறித்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அம்மைய நாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவ சக்தியிடம் நடத்திய விசாரணையில் இரண்டாவது முறையும் பெண் குழந்தை பிறந்ததால் தனது கணவர் வீட்டில் பிரச்சனை ஏற்படும் என்பதால் பெண் சிசுவை கொன்று புதைத்ததாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பெண் சிசு புதைக்கப்பட்ட இடத்தில் நிலக்கோட்டை வட்டாட்சியர் முன்னிலையில் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் பெண் சிசுவின் உடலை தோண்டி எடுத்து நிகழ்விடத்தில் உடற் கூராய்வு பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் அந்த பெண் சிசுவின் உடல் மீண்டும் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. பெண் சிசுக்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த அம்மைய நாயக்கனூர் போலீசார் சிவ சக்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story

