கோவை: பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு செல்பி பாயிண்ட் திறப்பு !
கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே வரும் 27-ஆம் தேதி பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விழா நடைபெறவுள்ளது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் முருகேசன் முன்னிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விழாவைத் தொடங்கி வைக்கிறார். விழாவிற்காக எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் மற்றும் பார்வையாளர் அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவின் முன்னோட்டமாக, ஜல்லிக்கட்டு காளையின் கம்பீரமான சிலை கொண்ட செல்பி பாயிண்டை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் நேற்று திறந்து வைத்தார். ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் முருகேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகளும், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவித்தார். காளைகளை அடக்கும் வீரர்களுக்கு இரண்டு கார்களும், சிறந்த காளைக்கு தமிழக முதல்வர் ஒரு காரும், சிறந்த வீரருக்கு துணை முதல்வர் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளன. மேலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடிக்கும் காளைகள் மற்றும் வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன. சுமார் 50,000 பார்வையாளர்கள் இந்த ஜல்லிக்கட்டு விழாவைக் காண வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
Next Story



