கோவை: ரேஷனில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க ஆர்ப்பாட்டம் !

X
தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விற்பனை செய்யக் கோரி, தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் சூலூர் அருகே பாரதிபுரத்தில் இன்று 65-வது நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இதில் காஷ்மீரில் நடைபெற்ற சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் சண்முகம், தமிழகத்தில் அதிக அளவில் விளையும் தேங்காய் எண்ணெயை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாமாயிலுக்கு பதிலாக, உள்ளூர் உற்பத்தியான தேங்காய் எண்ணெய் சிறந்தது என்றும், தற்போதைய காலச் சூழலுக்கும் ஏற்றது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வெளிநாட்டிலிருந்து அதிக விலை கொடுத்து பாமாயிலை இறக்குமதி செய்து அரசு மானியம் வழங்குவதை சுட்டிக்காட்டிய விவசாயிகள், தேங்காய் எண்ணெயை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து, மானியம் வழங்கி நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Next Story

