அகற்றப்பட்ட நிழற்குடை அமைக்க பழையசீவரம் பகுதியினர் எதிர்பார்ப்பு

X
சென்னை -- கன்னியாகுமாரி தொழிற்தடம் திட்டம் சார்பில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக சாலையோரம் இருந்த பயணியர் நிழற்குடை கட்டடங்கள் பல்வேறு பகுதிகளில் அகற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில் உள்ள பழையசீவரம் பெரிய காலனிக்கான பேருந்து நிறுத்த பகுதியில் இருந்த நிழற்குடை கட்டடமும் அகற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது சாலை பணி முடிவுற்ற பகுதி பேருந்து நிறுத்தங்களில் புதிய பயணியர் நிழற்குடை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், பழையசீவரம் பெரிய காலனி பேருந்து நிறுத்தத்தில் அத்தகைய கட்டடம் ஏற்படுத்தவில்லை. போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் நிழற்குடை அமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து, பழையசீவரம் கிராமத்தினர் கூறியதாவது: பழையசீவரம் பெரிய காலனியில், 400 குடும்பத்தினர் வசிக்கின்றனர். மேலும், இப்பகுதி பேருந்து நிறுத்தம் அருகே ரயில்வே நிலையம் உள்ளது. ரயில் வாயிலாக பயணிக்கும் பல பகுதிகளைச் சேர்ந்தோர், இங்குள்ள பேருந்து நிறுத்தம் வந்து சுற்றி உள்ள கிராமங்களுக்கு செல்கின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே இருந்த நிழற்குடை கட்டடம் அகற்றப்பட்டு, தற்போது மீண்டும் கட்டாமல் விடுபட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, பழையசீவரம் பெரிய காலனி பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story

