பேராவூரணி மருத்துவமனையில் உலக புத்தக நாள் விழா
உலக புத்தக நாளினை முன்னிட்டு பேராவூரணி தர்ஷனா மருத்துவமனை வளாகத்தில் நூல் வாசிப்பு கூட்டம் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், படைப்பாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், எழுத்தாளர் மருத்துவர் துரை.நீலகண்டன் நூல் வாசிப்பின் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில், "நூல்கள் வாசிப்பது நம்மை தேற்றும், நம்மை வளர்த்தெடுக்கும், பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடையலாம், பள்ளி பாடப் புத்தகங்களை தாண்டி, நிறைய புத்தகங்களை தேடித் தேடி மாணவர்கள் வாசிக்க வேண்டும். நான் சிறுவயதில் இருக்கும் பொழுது பாடப் புத்தகங்களை தாண்டி, கண்ணதாசன் நூல்களையெல்லாம் வாசித்தேன். புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசித்துப் பழக வேண்டும். நாளிதழ் வாசிக்கும் பழக்கம் நம்மிடம் இருத்தல் அவசியம். என்னை வளர்த்தது வாசிப்பு மட்டும் தான்" என்றார். 'நாமும் மனிதர்கள்' நூலாசிரியர் ஆறு. நீலகண்டன், சூழலியல் குறித்த நூல்களை வாசிக்க வலியுறுத்தினார். ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்ற பொறுப்பாளர் கலைச்செல்வன் மாணவர்களிடம் பென்குயின் ஆவணப்படம் குறித்து உரையாடினார். நிகழ்வில் தமிழ் வழிக் கல்வி இயக்க பொறுப்பாளர்கள் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், த.பழனிவேல், திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், நகர வர்த்தகர் கழகப் பொருளாளர் மணிகண்டன், அமிழ் விளையாட்டுக் கழக பொறுப்பாளர் மருத உதயகுமார், ஒளிப்படக் கலைஞர் அமரேந்திரன், ஆசிரியர்கள் சிங்காரவேலு, காஜாமுகைதீன், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராவூரணி வாசகர் வட்டம் சார்பில், மாதம் ஒரு நூல் வாசிப்புக் கூட்டம் நடத்துவதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் மருத்துவர் துரை.நீலகண்டன் நூல்களை பரிசாக வழங்கினார்.
Next Story



