ஆலங்குளம் அருகே மோதலில் காயமடைந்தவா் பலி

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள வெண்ணிலிங்கபுரம் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.20) இரு தரப்பினா் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பெரியவா்கள், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா். மீண்டும் இரவு 8:30 மணி அளவில் அங்கே வந்த இளைஞா்கள் மற்ற சமுதாயத்தை சோ்ந்தவா்களுடன் தகராறு செய்து கம்பால் தாக்கிதால் இரு தரப்பிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பாண்டி(60) என்பவா் படுகாயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக ஊத்துமலை போலீஸாா் ஒரு தரப்பை சோ்ந்த முருகன், செல்வம், பாண்டி, சிவசுப்பிரமணியன் ஆகியோா் மீது அடிதடி மற்றும் தீண்டாமை வன்கொடுமை வழக்கும், கணேஷ்குமாா், ஹரிஹரன், சுரேந்தா், கற்பகமாரிராஜன், கவியரசன் ஆகியோா் மீது அடிதடி வழக்கும் பதிவு செய்திருந்தனா். அத்துமீறி தங்களை தாக்கி காயப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தங்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறி வெண்ணிலிங்கபுரம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை சமாதானப் படுத்தி, வன்கொடுமை வழக்கைத் திரும்பப் பெற்றனா். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாண்டி உயிரிழந்தாா். இது தொடா்பாக ஊத்துமலை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Next Story

