தமிழ்நாடு அணிக்கு சீருடை வழங்கி வழியனுப்பு விழா

தமிழ்நாடு அணிக்கு சீருடை வழங்கி வழியனுப்பு விழா
X
அகில இந்திய கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு அணிக்கு சுவாகத் கிராண்ட் ஹோட்டலில் சீருடை வழங்கி வழியனுப்பு விழா நடைபெற்றது
அகில இந்திய கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு அணிக்கு சீருடை வழங்கி வழியனுப்பும் விழா திண்டுக்கல் சுவாகத் கிராண்ட் ஹோட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, திண்டுக்கல் கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். தமிழ்நாடு கால்பந்து கழக குழு உறுப்பினர் பஷீர் அகமது, மாவட்ட கால்பந்து கழக துணைத் தலைவர்கள் சங்கரலிங்கம், ரமேஷ் பட்டேல் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட கால்பந்து கழக தலைவர் சுந்தர்ராஜன் தமிழ்நாடு அணியில் இடம் பிடித்த 18 வீரர்களுக்கு சீருடை வழங்கி வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பாக சுவாமி விவேகானந்தா கோப்பைக்கான 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான போட்டி, சத்தீஸ்கர் மாநிலம் நரென்பூர் மாவட்டத்தில் வருகின்ற மே 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஜம்மு காஷ்மீர், மேகாலயா, பீகார், ராஜஸ்தான், குஜராத் உட்பட 36 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்கினறன. அதனை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அணி "பி" பிரிவில் கர்நாடகா, அந்தமான் நிக்கோபார், சத்தீஸ்கர் மற்றும் குஜராத் ஆகிய அணிகளுடன் மோத உள்ளது. இப்போட்டிக்கான வீரர்கள் தேர்வு திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 278 கால்பந்தாட்ட வீரர்கள் பங்கேற்றனர். அதில் தமிழ்நாடு அணிக்காக கன்னியாகுமரி, மதுரை, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் பிஎஸ்என்ஏ கல்லூரியில் மூன்று நாட்களாக நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சைலேஜ் அணி கேப்டனாகவும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோல் கீப்பர் அருண் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டனர். துளசி மற்றும் முகமது அம்ஜத் ஆகியோர் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அணியினர் சென்னை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சதிஷ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு செல்ல உள்ளனர். வருகின்ற 28ஆம் தேதி முதல் போட்டியாக குஜராத் மாநிலத்தை எதிர்த்து தமிழக அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ.,கல்லூரி பேராசிரியர் முத்து காமாட்சி, மாவட்ட கால்பந்து கழக துணைச் செயலாளர் தங்கதுரை, செயற்குழு உறுப்பினர், குணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story