உணவு ஆர்டர் செய்தது போல் நடித்து ஊழியரை தாக்கிய மனைவியின் உறவினர் கைது

X
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்ப டுவதாவது:- தாராபுரம் பெரியநாயகி அம்மன் வணிக வளாக பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). தனியார் உணவு வினியோக நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் பாலசுப்பிரமணியம் நகரில் பிரியாணி ஆர்டர் செய்தவர்களுக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வழங்க சென்றதால் ஆர்டர் செய்த 4 பேர் இவரை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்தனர். இதில் காயம் அடைந்த செந்தில்குமார் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் கிராமம் காமராஜ் நகரை சேர்ந்த அவினாஷ் (25) என்பவரை கைது செய்து விசாரித்தனர். இதில் கிடைத்த தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:- செந்தில்குமார் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு தாராபுரத்தை சேர்ந்த செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து ஓசூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது செல்வி-செந்தில்குமார் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் செல்வி தனது சொந்த ஊரான தாராபுரத்திற்கு வந்துவிட்டார். அதன்பின்னர் ஓசூரில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது மனைவி திவ்யா என்பவருடன் செந்தில்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து திவ்யாவிற்கு கார்த்திக்கிடம் இருந்து செந்தில்குமார் விவாகரத்து வாங்கித் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் திவ்யாவிற்கும் செந்தில்குமாருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். அதன்பின்னர் திவ்யாவும் செந்தில்குமாரும் ஓசூரில் இருந்து தாராபுரத்திற்கு வந்து பூளவாடி பிரிவில் குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் திவ்யாவின் தாயார் செல்வி மற்றும் உறவினர்கள் பூளவாடி பிரிவில் உள்ள செந்தில்குமார் வீட்டிற்கு வந்தனர். அப்போது செந்தில்குமாருக்கும் திவ்யாவின் தாயார் செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட் டுள்ளது. அப்போது திவ்யா தனது தாயாருடன் சென்று விடுவேன் என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் திவ்யா “குளிக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன்” என்று மிரட்டினார். இது குறித்து திவ்யா தனது உறவினர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து திவ்யாவின் உறவினர்களான அவினாஷ், ராஜா, வீரக்குமார், கவின் ஆகிய 4 பேர் திருப்பூரில் இருந்து தாராபுரம் வந்து செந்தில்குமாரிடம் உணவு ஆர்டர் செய்தது போல் செய்து அவரை வரவழைத்து தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்து தாக்கியது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகிறார்.
Next Story

