தர்ப்பூசணி சாகுபடி செய்த விவசாயிகள், தங்களுக்கு இழப்பீடு வழங்க கோரி, கலெக்டரிடம் கோரிக்கை மனு

X
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், அச்சிறுபாக்கம், சித்தாமூர், லத்துார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், விவசாய நிலங்களில் தர்பூசணி பழங்கள், ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், தர்பூசணி விதை நடுவர். கோடைக்காலமான ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் தர்பூசணி விளைந்து சந்தைக்கு விற்பனைக்கு வரும். செங்கல்பட்டு மாவட்டத்தில் சாகுபடி செ்யயப்படும் தர்பூசணி பழங்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு, ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 30,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்தனர். கடந்த ஏப்ரல் மாதம், தர்பூசணி பழங்களை விற்பனை செய்யத் துவக்கினர்.இதற்கிடையில், கடந்த சில நாட்களாக,'டிவி' மற்றும் ஊடகங்கள் வாயிலாக, தர்பூசணியில் அடர் சிவப்பு நிறத்திற்காக 'எரித்திரோசின்' ஊசி செலுத்தப்படுவதாக செய்திகள் பரப்பப்பட்டன. இச்செய்தியால், தர்பூசணி பழங்களை வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால், குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலான விவசாயிகள், தர்ப்பூசணி பழங்களை விற்பனை செய்யாமல் நிலத்திலேயே விட்டதால், பெரிய இழப்பு ஏற்பட்டதாக, வேதனை தெரிவித்து உள்ளனர்.அதன் பின், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன், தர்பூசணி பயிரிடப்பட்ட விவசாய நிலங்களில் சமீபத்தில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், எந்தவித ரசாயன சாயங்களும் தர்பூசணி பழங்களில் செலுத்தப்படவில்லை என தெரிவித்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், வேளாண்மை இணை இயக்குனர் பிரேம்சாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட விவசாய நலச் சங்க தலைவரான பெருக்கரணை வெங்கடேசன் தலைமையில், 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், கலெக்டரை சந்தித்தனர். அப்போது, தர்ப்பூசணி பழத்தில் ஊசியை பயன்படுத்துவதாக தவறான வதந்தி பரவியதால், பழங்கள் விற்பனை செய்ய முடியாமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜிடம் மனு அளித்தனர். இம்மனு மீது, விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, தோட்டக்கலைத் துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
Next Story

