ஆவின் டீக்கடையில் குடிக்க தண்ணீர் தராததால் தகராறு

X
நாகை சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், தேர்தல் அங்கீகார வெற்றி விழா மற்றும் சித்திரை திருவிழா ஆகியவை நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. பின்னர் நடந்த பேரணியில், நாகூரில் இருந்து நாகை அவுரிதிடல் வரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வந்தனர். பேரணியில் வந்த சிலர், அவுரித்திடலில் நாகை நெய்தல் நகரை சேர்ந்த, நாகை நகர திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே.கே.பரம் வைத்துள்ள, ஆவின் டீக்கடைக்கு சென்றனர். அங்கு குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். அதற்கு, டீக்கடையில் வேலை பார்க்கும், நாகை காடம்பாடியை சேர்ந்த மெர்லின் (25) குடிதண்ணீர் பாட்டிலின் விலையை குறிப்பிட்டு சொன்னார். இதில் கோபமடைந்த அவர்கள், மெர்லினை தாக்கினர். இதை தடுக்க வந்த டீ மாஸ்டர் அப்துல்லாவையும் தாக்கி, கடையின் உள்ளே புகுந்து பொருட்களை சூறையாடினர். இதில், ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. காயமடைந்த மெர்லின், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, திமுக நிர்வாகி கே.கே.பரம் கொடுத்த புகாரின் பேரில், வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையை சூறையாடியவர்களை தேடி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

