தூத்துக்குடியில் ஆளுநரை கண்டித்து போஸ்டர்: வழக்கறிஞர் கண்டனம்

X
தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆளுநரை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்ற வேண்டும் என மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் இசக்கி லெட்சுமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி முழுவதும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நடத்த இருக்கும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டு கூட்டத்தை கண்டித்தும் அதற்கு வருகை தரும் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கார் அவர்களைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தூத்துக்குடி மாவட்ட குழுவின் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ஆளுநர் நடத்த இருக்கும் துணை வேந்தர்கள் மாநாட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது தவறான செயலாகும். ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன போஸ்டர்கள் ஓட்டினால் அதனை உடனடியாக அகற்றத் துடிக்கும் மாநகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் தமிழக ஆளுநரை கண்டித்தும் இந்திய துணை குடியரசுத் தலைவர் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியை கற்றாமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். ஆளும் திமுக அரசிற்கு சாதகமாக ஒட்டப்படும் போஸ்டருக்கு அனுமதியும், ஆளும் திமுக அரசை கண்டித்து எதிர்க்கட்சிகளால் ஒட்டப்படும் சுவரொட்டிகளுக்கு அனுமதி மறுப்பும் இந்த மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் செய்வது அரசின் பாரபட்ச நடவடிக்கையை காட்டுகிறது. எனவே, ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் அவர்களை கண்டித்து தூத்துக்குடியில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து சுவரொட்டிகளையும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

