ஜெயங்கொண்டம் அருகே இலையூர் மஹா காளியம்மன் கோவில் திரு நடன உற்சவ விழா கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

X
அரியலூர், ஏப்.27- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் காளியம்மன் திரு நடன உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இந்த நிலையில் முக்கிய நிகழ்வான காளியம்மன் திரு நடன உற்சவம் வெகு விமர்சையாக இன்று தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் உற்சவ சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவிலில் இருந்து பூங்கரகத்துடன் புறப்பட்ட மகாகாளியம்மன் முக்கிய வீதிகளில் வலம் வந்து பின்னர் வீடு வீடாகச் சென்று திரு நடனமாடிய காட்சிகள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் வீட்டிற்கு அம்மன் வேடமனிந்த காளியம்மனை பக்தர்கள் வரவேற்று, மாவிலக்கு, தேங்காய், பழம் வைத்து வழிபட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்களுக்கு காளியம்மன் வேடமணிந்த ஒருவர் அருள் வாக்கு கூறி ஆசி வழங்கினார். அதேபோன்று பச்சைகாளியம்மன், சிவப்பு காளியம்மன் வேடமணிந்த பக்தர்கள் மேளதாளத்துடன் சிறப்பு நடனமும் நடைபெற்றது. இதைக் கண்டு அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கரகோஷங்களை எழுப்பி வழிபட்டனர். பக்தி சிறத்தையுடன் நடைபெற்ற விழாவில் இலையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று மாலை ஊஞ்சல் உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

