நிழற்குடை பணிகளை விரைந்து முடிக்க வல்லக்கோட்டை மக்கள் வேண்டுகோள்

X
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இத்தலம், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்தது. இக்கோவிலில், 7 அடி உயரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் அரசு பேருந்து வாயிலாக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் உள்ள வல்லக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை வசதி இல்லை. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் வெயில், மழையில் பேருந்திற்காக சாலையோரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் வல்லக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் இருக்கை வசதியுடன் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பக்தர்கள், பயணியர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், இருக்கை வசதியுடன் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி, கடந்த ஜன., மாதம் துவங்கியது. இந்த நிலையில், நான்கு மாதங்களை கடந்த நிலையில், பயணியர் நிழற்குடை பணிகள் முழுமை பெறாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளது. நிழற்குடைக்குள் பயணியர் அமர இருக்கை வசதி இல்லாததால், பெண்கள், வயதானோர் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, பயணியர் நிழற்குடை உள்ளே இருக்கைகள் அமைத்து, பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

