ஸ்ரீ மாரியம்மன் கோயில் ஆண்டு சித்திரை திருவிழா
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த தலையாமழை கிராமத்தில், பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறும் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் இரவு வீதி உலா காட்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி முளைப்பாரியை சுற்றி கும்மி அடித்தபடி பாடல்கள் பாடி நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தும், மாவிளக்கு போட்டும் நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். இரவு அம்மன் வீதியுலாவை தொடர்ந்து, அழிந்து வரும் நாடகக்கலையை மீட்டெடுக்கும் வகையில், சம்பூர்ண ஹரிச்சந்திரா புராண நாடகம் அரங்கேற்றப்பட்டது.
Next Story



