ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
X
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் சி்த்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் சி்த்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் தோளுக்கினியானில் வீதி புறப்பாடு நிகழ்ச்சி, திருமஞ்சனம், தீர்த்தவாரி, தினமும் மாலையில் சிம்ம வாகனம், அனுமார் வாகனம், ஷேச வாகனம், யானை வாகனம், உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதிஉலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கள்ளபிரான் சுவாமி, பெருமாள் கொடிமரம் சுற்றி எழுந்தருளி, 6 மணிக்கு மேல் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு வந்து திருத்தேரில் எழுந்தருளினார். காலை 9 மணிக்கு தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கோவில் ஸ்தத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி தேர் இழுக்கும் பொதுமக்களுக்கு வழிகாட்டினார். அப்போது தேரை இழுக்கும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோபாலா என கூறியவாறு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது தெற்கு முத்தாரம்மன் கோவில் தெரு, பழைய தாலுகா அலுவலகம், தேவர் சிலை சாலை, தபால் நிலையம் சாலை வழியாக மதியம் 1 மணியளவில் கள்ளபிரான் கோவில் முன்பு வந்து சேர்ந்தது. அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 3.30 மணியளவில் கோவில் முன்பிருந்து மீண்டும் புறப்பட்ட தேரானது பேருந்து பணிமனை சாலை, அஞ்சிலாம் தெரு வழியாக மாலை 6.30 மணிக்கு மீண்டும் தேர் நிலையத்தை வந்து அடைந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 9 மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் பெருமாள் வீதி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story