கோவை: தங்கக் கட்டி மோசடி புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் !

கோவை: தங்கக் கட்டி மோசடி புகார்  அளித்தவருக்கு கொலை மிரட்டல் !
X
தங்கக் கட்டிகள் மோசடி தொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்த கோவைப்புதூரைச் சேர்ந்த முகமது அலி ஜின்னாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. மேலும், அவரது மகளின் முகத்தில் ஆசிட் வீசுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
தங்கக் கட்டிகள் மோசடி தொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்த கோவைப்புதூரைச் சேர்ந்த முகமது அலி ஜின்னாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. மேலும், அவரது மகளின் முகத்தில் ஆசிட் வீசுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் நேற்று புகார் அளித்துள்ளார். முகமது அலி ஜின்னா, சஞ்சய் குமார் ரெட்டி என்பவருக்கு பொது அதிகார முகவராக இருந்து வருகிறார். இவர் கடந்த வாரம் முருகேசன், ரமேஷ், மைதிலி, முனீஸ்வரன், ஜெயப்பிரகாஷ், ஆதர்ஸ் நாராயணன் மற்றும் பெயர் தெரியாத நபர்கள் மீது பண மோசடி புகார் அளித்து சி.எஸ்.ஆர் பெற்றுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு சம்பந்தப்பட்ட நபர்கள் முகமது அலி ஜின்னாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், அவரது நண்பரான கோவைப்புதூரில் உள்ள செல்வராஜ் வீட்டிற்கு அருகில் சென்று நோட்டமிட்டுள்ளனர். அங்கிருந்த முகமது அலி ஜின்னாவின் மகளின் முகத்தில் ஆசிட் வீசுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கால தாமதம் செய்வதாக முகமது அலி ஜின்னா குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு பயம் ஏற்பட்டுள்ளதாகவும், மிரட்டல் விடுத்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் நந்தகுமாருடன் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த முகமது அலி ஜின்னா இந்த புகார் மனுவை அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story