கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு ஒரு உதாரணம்-திருமாவளவன் பேச்சு !

X
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, இந்தியாவில் இனி இதுபோன்ற குற்றங்கள் நடக்காததற்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த வழக்கில் திமுக, அதிமுக, விசிக என யாரும் உரிமை கோருவதில் நியாயமில்லை என்றும், வலுவான ஆதாரங்களே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளது என்றும் கூறினார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொல்லை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பேசிய திருமாவளவன், பாலியல் குற்றங்கள் குறித்து மாநில அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்றும், ரம்மி போன்ற விளையாட்டுகளையும், ஆபாச வலைதள விளம்பரங்களையும் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆர்எஸ்எஸ் சாகா பயிற்சி அளிப்பது குறித்து பேசிய அவர், இது மதவாத கருத்துக்களை மாணவர்களிடையே பரப்புவதற்கு வழிவகுக்கும் என்பதால், அரசு அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Next Story

