சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம்

17ம் தேதி விடையாற்றி விழாவுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் சித்திரை பெருந்திரு விழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை யொட்டி கடந்த மாதம் 29ம்தேதி பூச்சொரிதல் விழாவும், கடந்த 6ம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த 14ம் தேதி மாலை 5 மணியளவில் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று (15ம் தேதி) காலை 10 மணியளவில் நடந்தது. விழாவில் எம்பி அருண்நேரு, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், எஸ்பி ஆதர்ஷ் பசேரா, இணை ஆணையர் கல்யாணி, ஆகியோர் தேரின் வடத்தை பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து நிலை நின்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 17ம் தேதி விடையாற்றி விழாவுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
Next Story