கோவை: காட்டு யானை அட்டகாசம்-வாழைத் தோட்டம் சேதம் !
கோவை, கரடிமடை பகுதியில் காட்டு யானை புகுந்து வாழைத் தோட்டத்தை சேதப்படுத்திய சம்பவம் விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கரடிமடையைச் சேர்ந்த விவசாயி ஜெயராஜ் தனது வாழைத் தோட்டத்தில் வனவிலங்குகள் நுழைவதைத் தடுக்க சோலார் மின்வேலி அமைத்திருந்தார். இந்நிலையில், அப்பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரியும் ஒற்றைக் காட்டு யானை நேற்று இரவு மின்வேலியை சேதப்படுத்தி தோட்டத்திற்குள் புகுந்தது. ஆக்ரோஷமாக சுற்றி வந்த யானை, தோட்டத்தில் இருந்த 300க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியது. இதனால் விவசாயி ஜெயராஜுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. யானையின் இந்த அட்டகாசத்தால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தொடர்ந்து வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருவதாகவும், இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story



