கோவை: குடிநீருக்காக காலிக் குடங்களுடன் மக்கள் போராட்டம் !

X
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியம், சூலூர் வட்டத்துக்கு உள்பட்ட அப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏறத்தாழ 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் அப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் அத்திக்கடவுத் திட்டம் மூலம் குடிநீரும், போர்வெல்கள் மூலம் உப்புநீரும் வாரம் ஒருமுறை விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக குடிநீர் மற்றும் உப்பு நீர் விநியோகம் மாதம் ஒருமுறையாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த மே 1ஆம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் இப்பிரச்னை குறித்து மக்கள் புகார் அளித்தனர். அப்போது, சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும், அதன் பிறகும் தண்ணீர் விநியோகம் சீராக நடைபெறவில்லை. இதனைத் தொடர்ந்து, சுல்தான்பேட்டை ஒன்றியத்திலும் மக்கள் புகார் அளித்தனர். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று காலிக் குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சீரான குடிநீர் மற்றும் உப்புநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாகவும், கூடுதலாக ஒரு மேல்நீர்த் தொட்டி மற்றும் போர்வெல் அமைத்து தண்ணீர் பற்றாக்குறையை நிரந்தரமாக சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
Next Story

