மீன்சுருட்டி- கல்லாத்தூர் சாலையை தரம் உயர்த்த கோரி நடை பயணம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

X
ஜெயங்கொண்டம்,மே.18 - மீன்சுருட்டி-கல்லாத்தூர் சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி கரடு முரடான சாலையை செப்பனிட வலியுறுத்தி நடை பயணம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி -கல்லாத்தூர் சாலை கரடு முரடான சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்றி தரம் உயர்த்தி சாலையை செப்பனிட கோரி வீடுகள் தோறும் கருப்புக்கொடி போராட்டமும், சாலையில் நாற்று நடும் போராட்டமும், கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டமும், கிராமங்கள் தோறும் பஸ் நிறுத்தங்களில் கருப்புக் கொடி கட்டி போராட்டம், காத்திருப்பு போராட்டம் என பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், மேலும் அண்மையில் ஜெயங்கொண்டம் நகருக்கு சிப்காட் தொழிற்சாலை தொடங்கி வைக்க வந்த தமிழக முதல்வரிடம் மனு கொடுக்க முயற்சித்தும் முடியாததால் தலைமை செயலரிடம் மனு அளித்து கோரிக்கை குறித்து தெரிவித்தும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் நேற்று வெட்டியார்வெட்டு கிராமத்தில் இருந்து புறப்பட்டு மீன்சுருட்டி கடைவீதி வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்தே, தலையில் வெள்ளை தொப்பி அணிந்து கிராமம் தோறும் கோஷம் எழுப்பியவாறு நடை பயணம் மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து மீன்சுருட்டி பைபாஸ் சாலை மேம்பாலத்தின் கீழ் சாலை மேம்பாட்டு சீரமைப்புகுழு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து சாலை மேம்பாட்டு சீரமைப்பு குழு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளிடம் தெரிவித்ததாவது:-மீன்சுருட்டி-கல்லாத்தூர் சாலை சுமார் 15 கிலோ மீட்டர் சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி சாலையை அகலப்படுத்தி சாலையை செப்பனிட வேண்டும். மேலும் அப்பகுதியில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மீன்சுருட்டியில் தான் மிகப்பெரிய வாரச்சந்தை உள்ளது. வாரச்சந்தைக்காக ஏராளமான மக்கள் வந்து செல்லும் சூழல் இருப்பதாலும், மேலும் சலுப்பை கிராமத்தில் உள்ள அழகர்கோயிலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை உள்ளது. அது பாதுகாக்கப்பட்ட புரதான சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகின்ற ஏராளமான சுற்றுலா பயணிகளும், வெளியூரில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்களும் சலுப்பை அழகர் கோயிலுக்கு யானை சுதையை பார்க்க சரியான சாலை வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே மீன்சுருட்டி- கல்லாத்தூர் சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி செப்பனிட வேண்டும் என தெரிவித்தார்.மேலும் தமிழக அரசு இந்த சாலையை உடனடியாக மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்க வேண்டும், சீரமைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசிடம் இருந்து எந்த விதமான பதில் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து தமிழக அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் மிக பெரிய அளவில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
Next Story

