அரியலூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

X
அரியலூர், மே 17- அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதையொட்டி அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தும் வட்டார போக்குவரத்து அலுவலர்களின் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தனசாமி, பள்ளி வாகனங்களை நேரில் பார்வையிட்டு, வாகனங்களின் பதிவுச் சான்று, ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம், முதலுதவிப் பெட்டி, அவசர வழி, தீயணைப்புக கருவி, படிக்கட்டுக்கள், கதவுகள், ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து பணியை தொடக்கி வைத்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், 63 பள்ளிகளைச் சேர்ந்த 341 வாகனங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளது. இம்மாத இறுதிவரை வாகனங்கள் ஆய்வு மற்றும் மறு ஆய்வு செய்யப்படும், குறைபாடுடைய வாகனங்கள் கண்டறியப்பட்டு, சரிசெய்ய அறிக்கை அனுப்பபடும். குறைபாடு கண்டறியப்பட்ட வாகனங்கள் சரி செய்த பின்னர் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும். ஓட்டுநர்கள் வாகனங்களின் செயல்திறன் குறித்த முழு விவரத்தினையும் தெரிந்துகொள்ள வேண்டும். பள்ளி வாகன ஓட்டுநர்கள் கண் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். வாகனங்களை மெதுவாக இயக்குவதுடன், சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றார். வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மோட்டார் வாகன ஆய்வாளர் முகமது மீரான், அரியலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் இந்த ஆய்வுப் பணியை மேற்கொண்டனர். :
Next Story

