கோவை: அரசு பேருந்துகள் மற்றும் ஆட்டோ மோதி விபத்து !

X
காரமடை அருகே இரண்டு அரசு பேருந்துகள் மற்றும் ஆட்டோ ஒன்று மோதிக்கொண்ட விபத்து சிசிடிவி காட்சிகளால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த இருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கோவைக்கு இயக்கப்படுகின்றன. வேலைக்குச் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த பேருந்துகளின் மூலம் பயனடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. காரமடை மேம்பாலத்தில் இருந்து இறங்கும் போது, அந்த பேருந்துக்கு முன்னால் மற்றொரு அரசு டவுன் பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்தது. அப்போது, முன்னால் நின்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்ற அரசு பேருந்து, எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தொடர்ந்து நின்று கொண்டிருந்த டவுன் பேருந்தின் மீதும் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரசு பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் அதிவேக இயக்கமே விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story

