கோவை: குடிநீர் கேட்டு போராட்டம்-பேச்சுவார்த்தை தோல்வி

குடிநீர் பிரச்சினைக்காக அப்பநாயக்கன்பட்டியில் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்த நிலையில் அது தோல்வியில் முடிந்தது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் பிரச்சனை நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் தண்ணீர் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நேற்று துணை வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வந்த நிலையில், அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. நேற்று இரவு அப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பதட்டமான சூழ்நிலை உருவானது. குடிநீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்களை அமைதிப்படுத்த முயன்று வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணுமாறு கோரிக்கை வலுத்துள்ளது.
Next Story