கோவை: புதிய சாலை அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி !
கணியூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிய சாலை அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், சூலூர் தாலுகா, கணியூர் ஊராட்சி, பெரிய தோட்டம் பகுதியில் நியாய விலை கடை வீதி, பேருந்து நிறுத்தம் மற்றும் பெருமாள் கோயில் ஆகிய முக்கிய வீதிகளில் தனியாரால் கட்டப்பட்டிருந்த கட்டிட ஆக்கிரமிப்புகள் காரணமாக சாலை அமைக்கும் பணி தடைபட்டது. பொதுமக்களின் தொடர் புகார்களை அடுத்து, வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி அளவீடு செய்தனர். எனினும், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் தகர தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டதால் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சூலூர் வட்டாட்சியர் சரண்யா விரைந்து தலையிட்டு கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்தியதன் விளைவாக தற்போது சாலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது. பல மாதங்களாக சாலை வசதியின்றி தவித்த அப்பகுதி மக்கள் தற்போது சாலை அமைக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தங்களது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், அதிகாரிகளுக்குத் தங்கள் கோரிக்கைகளை எடுத்துச் சென்ற ஊடகத்திற்கு நன்றி என்றும் அவர்கள் இன்று தெரிவித்தனர்.
Next Story




