கோவை: முன்னாள் ஊராட்சி தலைவரின் செயலால் பாராட்டு மழை !
கோவை, சூலூர் அருகே கணியூர் ஊராட்சி முன்னாள் தலைவர் வேலுச்சாமி, தனது பதவிக்காலம் நிறைவடைந்த பின்பும் கூட சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் நீர்மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறார். அவரது இந்த மனிதநேயமிக்க செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கணியூர் பைபாஸ் சாலையில் முன்னாள் தலைவர் வேலுச்சாமி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நீர்மோர் பந்தல் அமைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் தாகத்தை தணித்து வருகிறார். நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த நெடுஞ்சாலையில், வெயிலின் கொடுமையால் தவிக்கும் மக்களுக்கு வேலுச்சாமி தானே முன்வந்து நீர்மோர் வழங்கி வருகிறார். கடந்த டிசம்பர் மாதத்துடன் ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்த போதிலும், வேலுச்சாமி தனது சேவையை நிறுத்தாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், பலரும் அவரது தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். கோடை காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் அவரது இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Next Story



