சாலையை கடந்த வாலிபர் லாரி மோதி உயிரிழப்பு

X
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே, எச்சூர் கிராமம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் உதயா, 27. அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை, வாலாஜாபாத் -- சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில், எச்சூர் சந்திப்பு அருகே, உதயா சாலை மையத் தடுப்பை நடந்து மறுபக்கம் கடந்து செல்ல முயன்றார். அப்போது, சுங்குவார்சத்திரம் நோக்கி வந்த லாரி, உதயா மீது மோதியது. இதில், லாரி சக்கரத்தில் சிக்கியதில் இரண்டு கால்களும் சேதமடைந்தன. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சந்தவேலுாரில் உள்ள அவசர சிகிச்சை மையத்திற்கு அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த உதயா, நேற்று முன்தினம் இரவு, உயிரிழந்தார். சுங்குவார்சத்திரம் போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
Next Story

