சாத்தனூர் தேசிய கல்மர பூங்காவில் உலக அருங்காட்சியக தின விழிப்புணர்வு
சாத்தனூர் தேசிய கல்மர பூங்காவில் உலக அருங்காட்சியக தின விழிப்புணர்வு நிகழ்வு அருங்காட்சியகங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் மே-18 அன்று உலக அருங்காட்சியக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான அருங்காட்சியகங்கள் இந்த தினத்தில் பங்கேற்கின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில், சுமார் 12 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்மரத்தை தன்னகத்தே கொண்டுள்ள சாத்தனூர் தேசிய கல்மர பூங்காவில் உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய புவியியல் மாற்றங்களின் சான்றாக விளங்கும் சாத்தனூர் கல்மரம், காரை தொல்லுயிர்ர எச்சங்கள் நிறைந்த பகுதியும் விளங்குகிறது. குன்னம், கரம்பியம், வரகூர் உள்ளிட்ட கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்மரங்களும் அமோனைட் உள்ளிட்ட பல புதைபடிமங்களும் பெரம்பலூர் மாவட்டத்தின் புவியியல் சிறப்பை பறை சாற்றுகிறது. புவியியல் பயிலும் மாணவர்களின் சொர்க்க பூமியாக அரியலூரும், பெரம்பலூரும் விளங்கிவருகிறது. சாத்தனூரில் உள்ள தேசிய கல்மர பூங்காவிற்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வருகை தரும் மக்களுக்கு , சுற்றுலாப் பயணிகளுக்கு புவியியல், கல்மரங்கள், புதை படிமங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கற்றல் விளக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. சிறியது முதல் பெரிய அளவிலான அமோனைட்ஸ் எனும் புதைபடிமங்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மேலும் சிறப்பு கூட்டுவதை உணர்த்தும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் அமோனைட் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. மேலும் கொளக்காநத்தம் அருகே உள்ள காரையில் தமிழ்நாடு அரசு சார்பில் புதைபடிம அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு சாத்தனூர் தேசிய கல்மர பூங்காவில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் அரியலூர் புவியியலாளர் பிரசாத் அவர்கள் பங்கேற்று வந்திருந்தவர்ரகளுக்கு மிகவும் சிறப்பாக கல்மரங்கள் பற்றியும், பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட சிறப்புகள், சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய புவியியல் மாற்றங்கள், அமோனைட் உள்ளிட்ட பல்வேறு படிமங்கள் பற்றிய தகவல்கள், கிரிட்டேசியஸ் காலம், பெருவெடிப்பு கொள்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை எடுத்துச்சொன்னதொடு கற்றல் விளக்க மையத்தில் உள்ள தொகுப்புகள் பற்றியும் விளக்கமளித்தார். மேலும் படிமங்களை எவ்வாறு கண்டறிவது, கண்டறிந்த படிமங்களை கற்றல் விளக்க மையத்தில் ஒப்படைப்பது, நம்ம ஊர் அடையாளங்களை பாதுகாப்பது பற்றியும் கூறியதோடு, சில புதை படிமங்களைக் கொண்டு அவைகள் பற்றிய தகவல்களையும் எடுத்துக் கூறினார். நிகழ்வில் சாத்தனூரைச் சேர்ந்த இளைஞர்களும், குழந்தைகளும் கலந்துகொண்டனர். விழிப்புணர்வு நிகழ்வின்போது புவியியலாளரிடம் குழந்தைகளும், இளைஞர்களும் தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்ததோடு உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வின் மூலம் உள்ளூரில் உள்ள இந்த அதிசய கல்மரத்தை பற்றி அனைவருக்கும் எடுத்துச் சொல்வோம் என்றும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து உதவுவோம் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளையும் எடுத்துக்கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாட்டை சாத்தனூர் மற்றும் புதிய பயணம் நண்பர்கள் செய்திருந்தனர்
Next Story








