கர்ப்பிணிகளுக்கான கவனிப்பு பிரிவுகள் துவக்கம்

X
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (19.05.2025) துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்- குமரி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளுடன் மேம்படுத்தும் வகையில் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையானது மகப்பேறுக்காகவே மிகவும் சிறப்பான மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.35 இலட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு என குளிரூட்டப்பட்ட காத்திருப்போர் அறை, குளிரூட்டப்பட்ட பிரசவறை, குளிரூட்டப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம், திரைச்சீலை மறைப்புடன் கூடிய வார்டுகள், கர்ப்பிணிகளுடன் உடன் இருப்பவருக்கு படுக்கை வசதி, பொருட்கள் பாதுகாப்பு வசதி, 24 மணிநேர வெந்நீர் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இவ்வாறு கூறினார். தொடர்ந்து அமைச்சர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகம் மற்றும் மகப்பேறு சஞ்சீவி சித்த மருந்துகளை வழங்கினார்கள். நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், இணை இயக்குநர் மருத்துவம் மரு.சகாய ஸ்டீபன்ராஜ், பூதப்பாண்டி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் மற்றும் துணை இயக்குநர் குடும்பநலம் மரு.ரவிக்குமார், தோவாளை வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராஜகுமார், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் மரு.பியூலா, துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story

