கோவை: தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை தீவிரம் !
தென்மேற்கு பருவமழை நெருங்கி வருவதை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை திறம்பட கையாள்வதற்கான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெள்ள அபாயம் அதிகமுள்ள மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் இப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, நேற்று பேரூர் பெரிய குளத்தில் தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பதற்கான ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். இதில், பரிசல்கள், உயிர்காக்கும் மிதவை ஆடைகள் மற்றும் கயிறுகளைப் பயன்படுத்தி மீட்புப் பணிகளை மேற்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், அவசர காலங்களில் தெர்மாகோல் மற்றும் காலி வாளிகளைப் பயன்படுத்தி தற்காலிக பாதுகாப்பு பெறுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். மேலும், கோவை மண்டலத்தில் இயக்கப்படும் 949 அரசு பேருந்துகளின் மேற்கூரைகளை மழைநீர் கசியாத வண்ணம் பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பயணிகள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்யும் நோக்கில் இப்பணிகள் ஒரு வார காலமாக நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story






