கோவை: ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களின் கண்ணீர் மனு !

X
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிரிஸ்டல் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், சம்பளப் பிரச்சனைகள் மற்றும் பணிநீக்க அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் பவன் குமாரிடம் நேற்று கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், தங்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படாதது, மருத்துவ பலன்களுக்காகப் பிடித்தம் செய்யப்பட்ட தொகை செலுத்தப்படாதது, மற்றும் சம்பள ரசீதுகள் வழங்கப்படாதது போன்ற பல்வேறு பிரச்சனைகளை அவர்கள் குறிப்பிட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய பணியாளர்கள், உரிய சம்பளம் கோரினால் பணிநீக்கம் செய்வதாக கிரிஸ்டல் நிறுவனம் அச்சுறுத்துவதாகவும், ஒப்பந்தம் புதுப்பித்தல் என்ற பெயரில் பணியிலிருந்து நீக்க முயற்சிப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து அரசு மருத்துவமனை முதல்வர் மற்றும் இருப்பிட மருத்துவரிடம் முறையிட்டபோது, அவர்களுக்கும் நிறுவனத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிட்டதாக தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் வடித்தனர். தங்களின் நியாயமான கோரிக்கைகளை யாரும் செவிசாய்க்காதது அவர்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பணியாளர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் பவன் குமார், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
Next Story

