கோவை: தியேட்டருக்குள் அருவிபோல் கொட்டிய மழைநீர் !
கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அவினாசி சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் மழைநீர் அருவி போல் கொட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று மாலை கோவை மாநகரில் கனமழை பெய்தது. அப்போது, அவினாசி சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் படம் ஓடிக்கொண்டிருந்த போது, அதன் மேற்கூரையில் இருந்து மழைநீர் ஒழுக ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மழைநீர் அருவி போல் கொட்டத் தொடங்கியது. குறிப்பாக, திரையின் மேல் பகுதியிலும் இருந்து மழைநீர் விழுந்தது. இந்த எதிர்பாராத நிகழ்வால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், படம் பார்ப்பதில் இடையூறு ஏற்பட்டதால், எங்கிருந்து இவ்வளவு தண்ணீர் வருகிறது? இதில் எப்படி படம் பார்ப்பது? என்று பேசிக்கொண்டது வீடியோவில் பதிவாகியுள்ளது. அங்கிருந்த ஒரு பார்வையாளர் தனது செல்போனில் எடுத்த இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. திரையரங்கின் மோசமான பராமரிப்பு குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Next Story



