ஆரணி அருகே பெரியஅய்யம்பாளையத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம்.

X
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே பெரியஅய்யம்பாளையம் மலையடிவாரத்தில் கண்ணமங்கலம் பேரூராட்சி சார்பில் ரூ.6கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அய்யம்பாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை மேற்கொள்ள முயன்ற போது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை சமரசம் செய்தனர். அப்போது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் குறித்து செயல் அலுவலர் முனுசாமி விளக்கம் அளித்து பேசியது, இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இங்கு அமைவதால் நிலத்தடி நீரோ அல்லது சுற்றுசூழலோ எந்தவிதத்திலும் பாதிக்காது. மக்களை பாதிக்ககூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசு மேற்கொள்ளாது. இதுபோன்ற சுத்திகரிப்பு நிலையங்கள் பல்வேறு இடங்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்டு, எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், போளூர், சேத்பட், வேட்டவலம் பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான விழிப்புணர்வு வீடியோவை நம் மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே வெளியிட்டுள்ளார். எனவே பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் பொதுமக்களை சமாதானம் செய்து பேசினார். அப்போது, மத்திய, மாநில அரசுகள் திட்டங்களில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு திட்டத்தை யாரும் தடுக்க கூடாது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story

