பெரணமல்லூர் அருகே மாட்டு கொட்டகையில் மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் சாவு.
ஆரணி பெரணமல்லூர் அடுத்த திருமணி அருகே எஸ்.காட்டேரி கிராமத்தில் உள்ள மாட்டுகொட்டகையில் மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் இறந்தனர். பெரணமல்லூர் அடுத்த திருமணி அருகே உள்ள எஸ்.காட்டேரி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பன்(48), சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். நாகப்பன் என்பவர் நாராயணமங்கலம் பகுதி ஊராட்சி செயலாளராக உள்ளார். இவரது ஒரே மகன் விக்னேஸ்வரன்(27) உள்ளார். இவர் மினிடெம்போ டிரைவராகவும், எலக்ட்ரீசீனியாகவும் இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி லஷ்மி, தனுஷ்கா என்கிற 4 மாத கைக்குழந்தையும் உள்ளது. மேலும் நாகப்பனின் மாமனார் முனியாண்டி(70) என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களது மாட்டு கொட்டகை வீட்டு அருகில் உள்ள நிலத்தில் உள்ளது. மேலும் நாள்தோறும் முனியாண்டி மாட்டிலிருந்து பால் கறந்து பால் வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம்போல் புதன்கிழமை காலை மாட்டில் பால் கறப்பதற்காக வீட்டிலிருந்து மாட்டு கொட்கைக்கு சென்றுள்ளார். அப்பொழுது ஏற்கனவே அந்த மாட்டு கொட்கையில் மழை காரணமாக மின்விளக்கில் ஏற்பட்ட மின் கசிவு கொட்டாவினை தாங்கி பிடிக்கும் இரும்பு பைப்பில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை அறியாமல் முனியாண்டி கொட்டகை கம்பத்தை தொட்டவுடன் மின்சாரம் பாய்ந்து அப்படியே சரிந்துள்ளார். தொடர்ந்து சிறிது நேரத்தில் அங்கு வந்த அவரது பேரன் விக்னேஸ்வரன் தாத்தா மயங்கி கிடப்பதை பார்த்து அலறி டி அருகே சென்று தூக்கி உள்ளார். ஏற்கனவே மின்சாரம் பாய்ந்து இருந்த நிலையில் விக்னேஸ்வரன் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் தாத்தா உடல் மீது அப்படியே சரிந்துள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் அந்த வழியே சென்ற பெண்மணி மயங்கி கிடந்தவர்களை கண்டு உடனடியாக அவர்களது வீட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு சென்ற நாகப்பன் அவர்களை தூக்க சென்ற போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே சுதாகரித்துக் கொண்ட அவர் அருகில் இருந்த கட்டையை எடுத்து இருவரையும் தூரமாக தள்ளி கொட்டகைக்கு வரும் மின்சார விளக்கின் இணைப்பினை கட்டையால் தட்டி துண்டித்து விட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாமனார் மற்றும் மகனை சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பெரணமல்லூர் காவல் நிலையத்தில் நாகப்பன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story



