கோவை: ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !

ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். புதிய மற்றும் பழைய கட்டிடங்களில் உள்ள அனைத்து அறைகளிலும் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டது. நேற்று பிற்பகல் ஆட்சியர் அலுவலகத்தின் இ-மெயில் முகவரிக்கு வந்த ஒரு மின்னஞ்சலில், சரியாக பிற்பகல் 3.30 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்றும், முடிந்தால் தடுத்துப் பார்க்கவும் என்றும் எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக ஆட்சியர் பவன்குமாருக்கும், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் உடனடியாக ஆட்சியர் அலுவலகத்திற்கு விரைந்தனர். பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை புதிய மற்றும் பழைய கட்டிடங்களில் உள்ள ஒவ்வொரு தளத்திலும், அறை அறையாக தீவிர சோதனை நடத்தப்பட்டது. நீண்ட நேர சோதனைக்குப் பிறகு எந்த இடத்திலும் வெடிகுண்டு இல்லை என்பது உறுதியானது. இது ஒரு புரளி என்பது தெரிந்ததை அடுத்து, போலீசார் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story