ராணிப்பேட்டையில் தொழிலாளி வெட்டி கொலை உறவினர்கள் சாலை மறியல்

X
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மேட்டு வேட்டாங்குளம் கிரா மத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் கடந்த 19-ந் தேதி தனது நண்பர்களுடன் ரோட்டில் நின்று பேசிக்கொண்டி ருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த 5 பேர் மதுபோதையில் காரை நிறுத்திவிட்டு சிகரெட் பிடிக்க தீப்பெட்டி கொடுங்கள் என மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு மணிகண்டன் தரப்பினர் எங்களிடம் தீப்பெட்டி இல்லை என்று கூறியுள்ளனர். பின்பு அந்த நபர்கள் வந்த காரில் சினிமா பாடலை சத்தமாக ஒலிக்கவிட்டு அதற்கு நடனமாடுங் கள் என்று கூறி வற்புறுத்திதகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி உள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. தொடர்ந்து ஊர் பொதுமக்கள் வருவதை கண்டு காரில் வந்த மர்மநபர்கள் உங்களை என்ன செய்கிறேன் பார் என்று மிரட் டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து இதுகுறித்து மணிகண்டன் மற்றும் ஊர் பொதுமக்கள் 10-க்கும் மேற்பட்டோர் திங்கட்கிழமை மாலையே நெமிலி காவல் நிலையத்திற்கு வந்து, முன்னாள் ஊராட்சி தலைவர் ஒருவரின் மகன் உள்ளிட்ட 5 பேர் காரில் வந்து எங்கள் பகுதியில் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். அவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். இந்தநிலையில் நேற்று மேட்டு வேட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியரான தட்சிணாமூர்த்தி (27) என்பவர் காலை 7 மணிக்கு தன்னுடைய விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது 2 மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம கும்பல் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தட்சிணா மூர்த்தியை தலை, முதுகு, கை, கால் உள்ளிட்ட பல்வேறு பகு திகளில் வெட்டி உள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் கூச்சலிடவே அந்தகும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதனை அறிந்த தட்சிணா மூர்த்தியின் பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் உறவினர் மற்றும் கிராம பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி பனப்பாக்கம் நெமிலி சாலையில், தட்சிணாமூர்த்தியின் பிணத்தை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா, அரக்கோணம் கோட்டாட்சி யர் வெங்கடேசன், துணைபோலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக், நெமிலி தாசில்தார் ராஜலட்சுமி, உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தீடீரென கேனில் வைத்திருந்த டீசலை எடுத்துவந்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றினர். பின்னர் சாலை மறியலை கைவிடுங்கள் என்று அதிகாரிகள் கூறினர். அதற்கு குற்றவாளிகளை கைது செய் தால் மட்டுமே கலைந்து செல்வோம் என கூறினர். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க 3 தனிப்படை அமைத்துள்ளோம். குற்றவாளிகளை பிடித்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வோம் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் கொலை செய்யப்பட்ட தட்சிணா மூர்த்தி உடல் பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் மதியம் 2 மணிக்கு முடிந்தது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பனப்பாக்கம்-நெமிலி சாலையில் 6 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story

