குழித்துறை ரயில் நிலையம் பிரதமர் திறந்தார்

X
குமரி மாவட்டத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் குழித்துறை ரயில் நிலையமும் ஒன்று. தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய ரயில்வே நிலையமாக இந்த ரயில் நிலையம் உள்ளது. இது குமரியில் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் இரண்டாவது முக்கிய ரயில் நிலையமாகும். தினந்தோறும் கேரள மாநிலத்திற்கு வேலைக்காகவும், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணத்திற்காக ஏராளமானவர் இங்கிருந்து செல்கின்றனர். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்பவர்கள் அதிகம். எனினும் இந்த ரயில் நிலையம் அடிப்படை வசதிகள் இல்லாமல் காணப்பட்டது. எனவே வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் குழித்துறை ரயில் நிலைய மேம்பாட்டு பணிக்கு ஒன்றிய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 6. 2 கோடி ஒதுக்கீடு செய்தது. இதை அடுத்து இங்கு பயணிகள் காத்திருப்பு அறை, பார்க்கிங் வசதி, பிரம்மாண்ட நுழைவு வாயில், தேசிய கொடி கம்பம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட குழித்துறை ரயில் நிலையத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதை ஒட்டி குழித்துறை ரயில் நிலைய பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் ரயில்வே முதன்மை திட்ட அலுவலர் கண்ணன், விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பட் , நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா குமரி மாவட்ட தலைவர்கள் கோபகுமார், ஆர் டி சுரேஷ் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

