ஏற்காட்டில் இன்று கோடை விழா தொடக்கம்

X
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கின்றனர். இதையடுத்து அவர்கள் வேளாண்மை துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சித்துறை, பட்டுவளர்ச்சித்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனர். இந்த விழாவில் கலெக்டர் பிருந்தாதேவி மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் அண்ணா பூங்காவில் 1½ லட்சம் மலர்களை கொண்டு மலர் கண்காட்சி, பழங்கள் மற்றும் காய்கறி கண்காட்சியும் அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வன விலங்குகளை பாதுகாத்து வனத்தை பாதுகாப்போம் என்ற உணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வன விலங்குகளின் வடிவமைப்புகள், மேட்டூர் அணை உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் வண்ண மலர்களை கொண்டு அமைக்கப்படுகின்றன. கோடை விழா வருகிற 29-ந் தேதி வரை 7 நாட்கள் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
Next Story

