கொண்டலாம்பட்டி பெரியபுத்தூர் வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்
சேலம் கொண்டலாம்பட்டி அருகே பெரிய புத்தூரில் மிகவும் பழமை வாய்ந்த வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாதம் 2-வது வியாழக்கிழமை எருதாட்டம் நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று எருதாட்டம் நடந்தது. ஊர் பொதுமக்கள், பக்தர்கள் 10 குழுக்களாக சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய ஊர்களுக்கு சென்று எருதுகளுக்கு பூஜை செய்து பெரிய புத்தூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் வெண்ணங்குடி முனியப்பனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அங்கிருந்து மாரியம்மன் கோவில் அருகே உள்ள மைதானத்தில் எருதாட்டம் தொடங்கியது. தாசில்தார் மனோகரன், மண்டல துணை தாசில்தார் கீர்த்திவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 70 எருதுகளுக்கு கயிறு கட்டி வீரர்கள் இழுத்து வந்தனர். அப்போது பொம்மையை காண்பித்து போக்கு காட்டினர். இதற்கிடையே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் கதிரவனை மாடு ஒன்று ஓடி வந்து வயிற்றில் முட்டியது. இதில் அவர் காயம் அடைந்தார். காயம் அடைந்த போலீஸ்காரர் கதிரவன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story



