கோவை: நள்ளிரவில் காட்டுயானை தாக்கி மூதாட்டி பலி !

X
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சோலையாறு அணை இடதுகரை பகுதியில் நள்ளிரவில் காட்டுயானை தாக்கியதில் 77 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோலையாறு அணை இடதுகரை பகுதியைச் சேர்ந்த தாமஸ் - மேரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில், காட்டுயானை ஒன்று மேரி (77) என்பவரின் வீட்டின் பின்பக்க சுவரை உடைத்துள்ளது. சத்தம் கேட்டு எழுந்த மேரியும், அருகில் வசித்த தெய்வானை (75) என்பவரும் முன்வாசல் வழியாக தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது, மேரியை காட்டுயானை தாக்கி சிறிது தூரம் இழுத்துச் சென்றுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தெய்வானை அலறியடித்து ஓடியதில் கீழே விழுந்து காயமடைந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து யானையை அப்பகுதியிலிருந்து விரட்டியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், உயிரிழந்த மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த தெய்வானைக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

