சார் பதிவாளர் அலுவலகத்தில் சர்வர் செயலிழப்பு மக்கள் அவதி
திருவள்ளூரில் உள்ள இணை சார் பதிவாளர் அலுவலகங்களில் சர்வர் செயலிழப்பு காரணமாக 4 மணி நேரம் பத்திரம் பதிவு தாமதம் : திருவள்ளூரில் இணை சார் பதிவாளர் அலுவலகம் 1-ல் 45 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கும், இணை சார் பதிவாளர் அலுவலகம் 2-ல் 35 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பொது மக்களின் வசதிக்காக ஒரே கட்டிடத்தில் இரண்டு அலுவலகங்களாக செயல்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு அலுவலகத்திலும் 100 நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்து அதன்படி வாடிக்கையாளர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை 3 மணி நேரமாக சர்வர் வேலை செய்யாததால் ஒருவருடைய பத்திரமும் பதிவு செய்யப்படாததால் பதிவுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். அலுவலகத்தில் போதிய இட வசதி இல்லாததால் அலுவலக வாசலில் ஆங்காங்கே காத்துக்கிடந்தனர். இருப்பினும் பொது மக்களின் அவஸ்தையை கண்டுகொள்ளாத பத்திரப்பதிவுத் துறையினர் சரிவரை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக பத்திர பதிவு செய்ய வந்த பொதுமக்கள் குற்றம் சாட்டினர். பிற்பகல் 2 மணிக்கு மேல் சர்வர் வேலை செய்ய தொடங்கியதையடுத்து அவசரம் அவசரமாக பத்திரப்பதிவு செய்யும் பணி நடைபெற்றது. பத்திரப்பதிவுத்துறையின் அலட்சியத்தால் பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர்.
Next Story





