திருக்கண்டீசுவரம் கோயில் கல்வெட்டில் காணப்படும் தமிழ்நூல்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திருக்கண்டீஸ்வரமுடையார் கோயில் உள்ளது. தற்போது நடன பாதேஸ்வரர் என்றழைக்கப்பெறும் இக்கோயில் குறித்து திருக்கண்டீசுவரம் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.செல்வகுமார் அளித்த தகவலின்பேரில், அங்கு சென்ற சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான முனைவர் மணி.மாறன், பொந்தியாகுளம் ஊ.ஒ.தொ. பள்ளி தலைமையாசிரியர், வரலாற்று ஆய்வாளர் முனைவர் கோ. தில்லை கோவிந்தராஜன் மற்றும் சக்கராப்பள்ளி ஊ.ஒ.ந. பள்ளி பட்டதாரி ஆசிரியர் கோ. ஜெயலெட்சுமி ஆகியோர் அக்கோயில் குறித்து ஆய்வு செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது : கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட திருக்கண்டீஸ்வரம் சிவாலயத்து கல்வெட்டில் ஒரு தமிழ் நூலின் பெயர் குறிப்பிடப்பெறுகின்றது. அக்கல்வெட்டு வாசகம்: ‘‘அடுகூற்றுதைத்த தாளாடும் அடிகட்கு வடுகூர்ப்புராணம் வகுத்தான் புடவி நலம் கூர்ந்த புகழ் சோழகுலவல்லி வாழ்விற் ராசசேந்தன் தந்தை வாணாதிபன் என்கின்றது கருவறை முன்மண்டபத்து தென்திசையின் இடதுபுற அதிட்டானத்தில் பொறிக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்டில் கூற்றை உதைத்தாடும் அடிகளான சிவபெருமானுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் சோழகுலவல்லி நல்லூரைச் சார்ந்த வாணாதிபன் என்பவர் ‘திருவடுகூர்ப்புராணம்’ இயற்றியதாகக் குறிப்பிடுகின்றது. குலோத்துங்க சோழன் காலத்தில் கங்கை கொண்ட சோழ வளநாட்டு பட்டாம்பாக்கை நாட்டு சோழகுலவல்லி நல்லூர் என்றும் விக்கிரமசோழனின் ஆறாம் ஆட்சியாண்டு கல்வெட்டிலிருந்து ராஜராஜ சோழ வளநாட்டு பட்டாம்பாக்கை நாட்டு சோழகுலவல்லி நல்லூர் என்றும் இவ்வூரின் பெயர் அமைந்துள்ளது. சோழர் ஆட்சிக்கு முன்னர் இவ்வூர் வடுகூர் என்றழைக்கப் பெற்றிருக்கக் கூடும். இவ்வூரைச் சார்ந்த வாணாதிபன் பிற்காலத்தில் படைத்த திருவடுகூர்ப் புராணம் என்னும் நூல் சுவடி வடிவிலும், அச்சு நூல் வடிவிலும் கூட இன்று கிடைக்கப்பெறவில்லை. இந்நூல் கிடைப்பின் கல்வெட்டில் திருக்கண்ணீஸ்வரமுடையார் என்று சுட்டப்படும் இக்கோயிலின் வரலாற்றுச் செய்தியும் இவ்வூரின் வரலாற்றுச் செய்தியினையும் இன்னும் விரிவாகக் காண முடியும். ஒரு தமிழ் நூலின் தலைப்பே கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது வரலாற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இதே முகமண்டபத்தின் வடபுற அதிட்டானத்தில் தொடங்கி மேற்குப் பகுதி அதிட்டானம் வரை நான்கு வரிகள் கொண்ட நீண்ட கல்வெட்டுத் தொடர் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு விஜயநகர ஆட்சியாளர் கட்டாரி சாளுவ நரசிங்க தேவ மகாராஜன் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. சிதைவுற்றிருந்த இக்கோயில் மதில், மண்டபம் உள்ளிட்டவற்றைப் புதுப்பித்து திருப்பணி செய்தது பற்றி குறிப்பிடுவதோடு அதனை செம்பிலும் கல்லிலும் வெட்டிக்கொள்ளக் கடவதாக என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. இக்கல்வெட்டின் இறுதிப் பகுதியில் தெலுங்கு மொழி எழுத்தில் அம் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கல்வெட்டுகளும் கோயில் களப்பணியில் புதிதாகக் கண்டறியப்பட்ட செய்திகளாகும். மேலும் இக்கோயில் குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: திருக்கண்டீச்வரம் என்னும் இவ்வூர் சற்றேறக்குறைய 1400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளதை அறிய முடிகின்றது. சோழர்கால கல்வெட்டில் திருவடுகூர் மகாதேவர் கோயில் தட்சிணாமூர்த்திக்கு திருவமுது எனக் குறிக்கப்படும் சொல்லாட்சி கொண்டு இவ்வூரின் பெயர் திருவடுகூர் என்றழைக்கப்பட்டதை அறியலாம். திரு அடைமொழி சேர்த்து திருவடுகூர் என்று அழைக்கப்படுவதால் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் இக்கோயிலுக்கே உரியதாகும். பல்லவர் காலத்தில் எழுப்பப்பெற்ற இக்கோயில் பல்வேறு காரணங்களால் பல பகுதிகள் அழிவுபெற்று பின்வந்த சோழ மன்னர்கள் காலத்தில் புதுப்பிக்கப் பெற்றுள்ளதை காண முடிகின்றது. இக்கோயில் கருவறையின் வெளிப்புற வடபுறச் சுவரில் முதலாம் குலோத்துங்க சோழனின் 29, 38, 42, 44, 46, 49ஆவது ஆட்சி ஆண்டுகளில் வெட்டப்பெற்ற கல்வெட்டுகள் இன்றளவும் காணப்படுகிறது. சோழ மன்னர்களில் ஐம்பது ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே மன்னன் முதலாம் குலோத்துங்க சோழனே ஆவான். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயில் வளாகத்தில் கட்டுமானப் பணிக்காகப் பள்ளம் தோண்டும்போது சோழர் காலத்தைச் சேர்ந்த பூசைக்குப் பயன்படுத்திய உலோகத்தாலான பொருட்கள் மற்றும் நந்தாவிளக்கு ஒன்றும் கண்டறியப்பெற்று அவை இங்கு பாதுகாக்கப்பெற்று வருகின்றது. பின்னர் பாண்டியரின் ஆளுகையின்கீழ் இப்பகுதி வருகின்றது. இக்கோயிலில் காணப்படும் கடவுளர் பெயராக பாண்டியர் கல்வெட்டில் இரண்டாம் பிரகாரத்து செல்வப் பிள்ளையார் கோயிலும் தெட்சிணாமூர்த்தி கோயிலும் குறிப்பிடப் பெறுகிறது. மேலும், அம்பாளின் பெயரினை பாண்டியர் கல்வெட்டு தளர் இளம் கொடியள் என்று குறிப்பிடுகிறது. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் பணியாற்றிய அலுவலர் குனிக்கும் பெருமாள் என்ற பெயர் இவ்வூருக்கு அருகமைந்த திருவதிகை கல்வெட்டிலும் காணப்பெறுகின்றது. இக்கோயில் பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர ஆட்சியாளர், மராத்தியர் ஆகியோர் ஆட்சிக் காலங்களில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பெற்றுள்ளதைக் காண முடிகின்றது. மேற்குப் பார்த்த நிலையில் இறைவர் வீற்றிருக்க அதற்கு சற்றுத் தள்ளி கிழக்கு பார்த்த திசையில் அம்மனின் ஆலயம் எழுப்பப்பெற்றுள்ளது. கல்வெட்டில் காணப்படும் திருக்கண்ணீஸ்வரமுடையார் என்ற பெயரிலேயே இவ்வூர் திருக்கண்ணீஸ்வரம் என்று அழைக்கப்பெற்றிருத்தல் கூடும். அப்பெயர் காலப்போக்கில் மருவி திருக்கண்டீஸ்வரம் என்று மாறி இருக்கலாம் என்று கருத இடமுண்டு. ஒரு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதாக இவ்வூரும் கோயிலும் திகழ்வது பெருமைக்குரியதாகும்.
Next Story




